குடும்பத்துடன் சுற்றுலா செல்வது
மகிழ்ச்சியான விஷயம். இந்த வருடம்
திருச்சி, மதுரை, செல்வது
என்று முடிவு எடுத்தோம்.
திருச்சியில் உள்ள ஒரு உறவினர்
வீட்டிற்கு சென்று அடைந்தோம். அன்று மாலையில்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம். இது ஒரு மிகப்பெரிய சிவன் கோவில். சிவனையும், அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்துவிட்டு கோவிலிற்கு
வெளியே வந்தவுடன் பசி வயிற்றை கிள்ளியதால் கோவிலை ஒட்டிய பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலுக்கு சென்றோம்.
பார்த்தசாரதி ஹோட்டலைப்பற்றி நிறைய பதிவர்கள் விரிவாக எழுதி ஆசையை தூண்டிவிட்டதால்
அந்த ஹோட்டலுக்கு உள்ளே சென்றோம். மிகவும்
பழமையான ஹோட்டல். நெய் தோசை இங்கு மிகவும் பிரபலமானதால் அதையே
ஆர்டர் செய்தோம். பொன் கலரோடு மொறுமொறுவென்று நெய் தோசையை கொண்டு
வந்து வைத்தார். தினமும் வீட்டில் வெள்ளைக்கலரில் தோசைப்பார்த்து
பழகிவிட்ட நமக்கு அந்த தோசையைப்பார்த்து நாக்கில் நீர் ஊறத்துவங்கிவிட்டது.
( மனசாட்சி : இனிமே உனக்கு
வீட்டில வெள்ளை தோசை கூட கிடைக்காது
போ? ) தோசையை சட்னியில்
கொஞ்சம் சாம்பாரில் கொஞ்சம் முழ்கவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். தேவாமிர்தமாக இருந்தது. எத்தனை தோசை உள்ளே போயிற்று என்று
தெரியவில்லை.
சாப்பிட்டு முடித்தவுடன் பெருங்காயம் கலந்த மோரையும் கொண்டு வந்து கொடுத்தார் ஆர்டர்
வாங்கியவர். மோர் மிகவும் ருசியாக
இருந்தது. வெய்யிலுக்கு இதமாக இருந்தது.
அங்கிருந்து திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை சென்று பார்த்தோம். இரவு 8 மணி வரைதான் பிள்ளையாரை
தரிசிக்க அனுமதி என்பதால் அவசர அவசரமாக பிள்ளையாரை தரித்தோம்.
மறுநாள் மதுரைக்கு சென்றோம். மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு சென்றோம். உண்மையைச் சொல்லுவதென்றால் மீனாட்சி
அம்மன் கோவில் விபூதி மணத்தோடு எல்லோரையும் மயக்கி விட்டது. நூறு
ரூபாய் தரிசனச்சீட்டு எடுத்ததால் உடனடியாக மீனாட்சி அம்மனையும், சிவனையும் தரிசிக்க முடிந்தது.
அங்கிருந்து திருமலை நாயக்கர் மஹால் சென்றோம். இரவு எட்டு மணி ஆகிவிட்டதால் சுற்றிப்பார்க்க முடியவில்லை.
ஒலிஒளிகாட்சி மட்டும் பார்க்க முடிந்தது. மிகவும்
அற்புதமாக இருந்தது. வெளியே வந்து ஜிகர் தண்டா ஸ்டாலைப்பார்த்தோம். மதுரைக்கு வந்துவிட்டு மதுரை ஸ்பெஷலான ஜிகர்தண்டாவை குடிக்காமல் போவதா என்று
நினைத்து ஜிகர்தண்டைவை குடித்தோம்.
கடல் பாசிக்களால் இது செய்யப்படுகிறது வயிற்றுக்கு மிகவும் நல்லது
என்று சொன்னார்கள்.
அடிக்கடி மதுரையை சுற்றி ஏன் படமெடுக்கிறார்கள் என்று இப்பொழுதான் தெரிகிறது. மதுரை ஒரு சிறந்த பொழுதுபோக்கு உள்ள நகரம்.
எங்கு பார்த்தாலும் உணவகங்கள்தான். அத்தனயும் ருசி.
அருமை. இட்லி ஒவ்வொன்றும் மல்லிகைப்பூ மாதிரி இருக்கிறது.
பரோட்டாவும் சால்னாவும் சூப்பர்.
சுற்றுலா மனதிற்கும், உடம்பிற்கும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது என்பது முற்றிலும் உண்மை.
புதுகை ரவி
ஜிகர்தண்டா மிகவும் அருமையாக இருக்கும் ! இன்னும் பல ஊர்கள் இருக்கின்றன போய் பார்க்க வாழ்த்துகள் ! நல்ல பயண பதிவு ! தொடருங்கள் !
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயசீலன்.
ReplyDelete