Thursday, 27 November 2014

பாட்டி சுட்ட வடை கதையை பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் படம் எடுத்தால் - ஒரு கற்பனை

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் ஒரு  டயலாக் சொல்லுவார். ” தயாரிப்பாளர் ரெடி, ஹீரோயின் ரெடி, ஹீரோ  நானே ஆக்ட் பண்ணிக்குவேன். எல்லாமே ரெடி  ஆனா அந்த கதை மட்டும் கிடைக்கலை” 

அவர் மாதிரி இப்பொழுது கோடம்பாக்கத்தில் கதைக்காக எல்லா  இயக்குனர்களும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்ஒரு லைன் மட்டும் கிடைத்தால் மட்டும் போதும் அதை மூன்று மணி  நேர படமாக ஆக்குவது என்று  முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தோம். நாமும் மூளையை கசக்கியதில் நமக்கும் ஒரு கதை புலப்பட்டது. நாம் பிறந்தவுடன் கேட்ட முதல் கதைதான் அது. ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டு விற்று கொண்டு இருந்தார்களாம். காக்கா ஒன்று அவர் வைத்திருந்த வடையை திருடிக்கொண்டு மரத்தின் மீது போய் உட்கார்ந்துச்சாம். அந்தப்பக்கமாக வந்த நரி ஒன்று தந்திரமாக காக்காவை பாடச்சொல்லி காக்காவின் வாயில் இருந்த வடையை கீழே வீழவச்சு அந்த வடையை தூக்கிட்டு ஒடி போய்டுச்சாம்.. இதுதான் நம் காதில் விழுந்த முதல் கதை. இதை யாரும் இன்னும் படம் எடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த கதையைகொடுத்து உதவலாம் என்று நினைத்து. சில பிரபல இயக்குனர்களிடம் இந்தக் கதையை சொன்னோம். அவர்கள் சொல்லிய கருத்துகளை உங்களுக்காக கீழே கொடுத்து இருக்கிறோம்.

இயக்குனர் ஹரிஎனக்கு கதையை பரபரன்னு விறுவிறுப்பாக எடுத்து பழக்கம். இந்த கதையில 50 அடியாட்கள், அருவாளு, டாட்டாசுமோ, பஸ் ஸடாண்டு, கோவிலு எதுவுமே இல்லை. நான் பரபரன்னு எப்படி எடுக்கிறது இந்த கதை எனக்கு சரிப்பட்டு வராது.

.ஆர்.முருகதாஸ் : ஏற்கனவே இப்ப இணையத்தில என் கத்திபடத்தைப்பற்றி அங்கிருந்து சுட்டேன் இங்கிருந்து சுட்டேன்ன்னு காய்ச்சு எடுக்கிறாங்க. நீங்க இப்ப பாட்டி சுட்ட வடை, காக்கா சுட்ட வடைன்னு சொல்லிட்டு போங்க சார் (அவருடய மனசாட்சி : இப்ப எந்த படத்தை எடுத்தாலும் தம்பி இது உங்க கதைதானா அல்லது மண்டபத்தில உங்களுக்கு யாராவது எழுதிக்கொடுத்தாங்களான்னு கேட்பாங்களே ? நான் என்ன பண்ணுவேன். இப்படி புலம்ப வைச்சுட்டியே சொக்கா” ?) 

ஷங்கர்நல்ல கதை. படத்தில் காக்கா வேடம் விக்ரமக்கு கொடுத்தா அவரு காக்காவே மாறி அசத்துவாரு. நரி வேடத்துக்கு ஹாலிவுட் ஆக்டர் யாரையாவது கூப்பிட்டாபோச்சு. அந்த கிழவி வேடத்திற்கு உலக அழகி மிகவும் பொருத்தமாக இருப்பாங்க. .ஆர் ரஹமான் சூப்பராக மியுசிக் போட்டுகொடுத்திடுவாறு, கவலையே வேணாம். அந்த வடைக்கு பதில் பாட்டி பீஸாவை விற்கற மாதிரி வைத்துக்கொண்டால் புதிய ட்ரெண்டாக இருக்கும். இந்த படத்தை பாரீஸ், சுவிட்சர்லாந்துன்னு அழகிய லோகேஷனில் எடுத்திடலாம்.. படத்திற்கு பட்ஜெட் 200 கோடி. படத்திற்கு கா ன்னு தலைப்பு வைச்சா  மிகவும்,அருமையாக இருக்கும். என்ன 200 கோடி ரெடியா வைச்சு இருக்கிங்களா ?

எஸ். எஸ். இராஜமௌலி : சூப்பர் கதை. படத்தில முதல் பகுதியில  இடைவேளைவரை காக்காகிட்ட இருந்து நரி ஏமாற்றி வடையை திருடிட்டு போன கதையை சொல்லலாம். இரண்டாம் பகுதியில இடைவேளைக்கு அப்புறம். காக்கா மனிதனாக மாறி  நரியாக மாறின மனிதனை பழிவாங்குது. படத்திற்கு நான் காக்கான்னு பெயர் வைச்சுக்கலாம்.

வெங்கட்பிரபு  : இந்த கதை நமக்கு சரிப்பட்டு வராது ஏன் என்றால் என் தம்பி பிரேமுக்கு இதில் நடிக்க வாய்ப்பே இல்லை. ஒன்று வேணா செய்யலாம். இரண்டு காக்கா இரண்டு வடையை எடுத்துகிட்டு போச்சுனு பிரேமை இதில் நடிக்க வைக்கலாம். அப்புறம் என் பிரண்ட்ஸ் 4 பேர் இருக்காங்களே. அவங்களுக்கு என்ன ரோல் கொடுப்பேன்.?

பாலா : கதை நல்லா இருக்கு. கதையை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளலாம். அந்த ஊர் முழுவதும் பஞ்சம். பட்டினி, ஒரு வேளை கூட யாருக்கும் சாப்பிட எதுவும் கிடைக்கலை. ஒரு வயதான பாட்டி கெட்டுப்போன எண்ணெயில் ,ஊசிபோன மாவில் வடையை சுட்டுக்கொண்டு இருக்கிறாள். சுட்டுக்கொண்டு இருக்கும்பொழுது அவள் இறந்து போகிறாள். காக்கா ஒன்று அவளிடம் இருந்து வடையை திருடி மரத்தின் மேல் அமர்ந்து சாப்பிடுகிறது. பாதி சாப்பிடும் போழுது அதுவும் இறந்து போகிறது. அதுவாயில் இருந்து வடை கீழே விழுகிறது. அங்கிருந்த நரி அந்த வடையை சாப்பிட்டு அதுவும் செத்து போகிறது. எப்படி இந்த கதை. உருக்கமாக இருக்கில்ல.


புதுகை ரவி

( இந்தப்பதிவு நகைச்சுவை எண்ணத்துடன் எழுதப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இதில் வரும் இயக்குனர்கள் அனைவரும்  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களின் ரசிகன் நான் )No comments:

Post a Comment