Monday 4 March 2013

ஒரு கற்பனை பட்டிமன்றம்




இது ஒரு முழுக்க முழுக்க கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். பொங்கல் நிகழ்ச்சியில் தொடர்ந்து பட்டி மன்றங்களைப் பார்த்ததால் வந்த பாதிப்பே இது.
==============================================================================
தமிழ் சினிமாவில் காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்களா ? அல்லது நிகழ்கால நடிகர்களா ? ஒரு கற்பனை பட்டிமன்றம். நடுவர் : திரு. சாலமன் பாப்பையா அவர்கள். பங்கு பெறுவோர்கள். திரு. பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்கள், திரு ராஜா அவர்கள்.
திரு. சாலமன் பாப்பையா : வணக்கம் பெரியோர்களே தாய்மார்களே. நாட்டில் மின்சார பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, தண்ணீர் பிரச்சனை போன்ற சிறிய பிரச்சனைகளை விட்டுவிட்டு பெரிய பிரச்சனையான தமிழ் சினிமாவில் காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்களா ? அல்லது நிகழ்கால நடிகர்களா ? என்று பேசுவதற்க்கு  வந்து இருக்கிறார்கள் பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்களும், திரு ராஜா  அவர்களும். கடந்தகால நடிகர்கர்கள்தான் என்று அடித்து சொல்ல வருகிறார்  பேராசிரியர் இராமச்சந்திரன். வாங்கய்யா இராமச்சந்திரன்.
பேராசிரியர் இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே. தமிழ் சினிமாவில் காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்கள்தான் எள்ளவும் சந்தேகமில்லை. காதல் மன்னன் ஜெமினி கணேசனின் படத்தை பார்த்து இருக்கிங்களா தலைவர் அவர்களே. காதல் காட்சிகள அவர பாருங்க முகத்தில பால் வடியும். கனிவோடு,காதலோடு, ரசிச்சு பாடுவாரு. நம்ம மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை எடுத்துக்குங்க. அவர்கள் காதல் பாடல்களை இன்னும் கேட்டுட்டே இருக்கலாம். அவரோட மானரீசம், அந்த குறும்பு,  துள்ளல், இன்னும் பலவற்றை  சொல்லலாம்.
தலைவர் அவர்களே, நீங்க கூட  எம்.ஜி.ஆர் பட காதல் காட்சிகளை பார்த்துவிட்டு தூக்கம் வரவில்லை என்று பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். நடிகர் திலகம் சிவாஜி படத்தை பாருங்க. காதல் காட்சிகளில் பின்னி எடுத்து இருப்பார். எத்தனைவித முகபாவங்கள் இருக்கும். பாடல்கள் எத்தனை நன்றாக இருக்கும்.


ஆனால் நிகழ்கால  டிகர்களை பாருங்கள். பொங்கலையும் புளியோதரையும் சாப்பிட்டு விட்டு வந்து பாடல் காட்சிகளில் நடித்த மாதிரி இருக்கும். முகத்தில் ஒரு பாவனைகளும் இருக்காது. கவர்ச்சி அதிகமாக இருக்கும். நடனம் அதிகமாக இருக்கும். கை காலை ஆட்டிக்கொண்டே (ஷாக் அடித்தால் எப்படி கை காலை ஆட்டுவார்களே அது மாதிரி), முதுகை மேம்பாலம் மாதிரி பின்னால் வளைந்து நெளிந்து நடனம் ஆடுவார்கள். ஸ்டைல் அதிகமாக இருக்கும்.  சிலர் கோட் மாட்டிக்  கொண்டு பாட்டில் நடந்து கொண்டே இருப்பார்கள். ஆகவே தலைவர் அவர்களே, தமிழ் சினிமாவில் காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்கள்தான் என்று கூறி வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடை பெற்று கொள்ளுகிறேன். வணக்கம்.
திரு.சாலமன் பாப்பையா : பேராசிரியர் இராமச்சந்திரன் நெத்தி அடியா  மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்கள்தான் சொல்லிட்டாரு. ராஜா என்ன சொல்லபோறாருன்னு பார்ப்போம். வாங்கய்யா ராஜா.
திரு ராஜா : தலைவர் அவர்களே, பேராசிரியர் இராமச்சந்திரன் நிகழ்கால படங்களை பார்ப்பது இல்லை என்று நினைக்கிறேன். பார்த்து இருந்தா அவரும் தூங்கி இருக்கமாட்டாரு. துணைவியாரையும் தூங்க விட்டு இருக்கமாட்டாரு. இராமச்சந்திரன் அவர்களே உங்களுக்கு ஒரு உண்மை ஒன்று சொல்லுகிறேன். கேட்டுக்குங்க நம்ம தலைவர் அவர்களுக்கு கடந்தகாலத்திலும் காதல்காட்சியை பார்த்துவிட்டு தூக்கம் வந்ததில்லை. இப்பவும் நிகழ்கால படத்தை பார்த்துவிட்டும்  தூக்கம் வருவதில்லை.
திரு. சாலமன் பாப்பையா :  என்ன ஏன்யா நடுவில்ல இழுக்குறீங்க. வீட்டில கலவரத்தை உண்டு பண்ணி விடுவிங்கள் போல் இருக்கே ?
திரு ராஜா : பேராசிரியர் இராமச்சந்திரன் சொல்லுகிறார் கவர்ச்சி அதிகம் என்று. எம்.ஜி.ஆர் படத்தில் கவர்ச்சி இல்லையா என்ன.? ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு படத்திலே கதாநாயகியிடம் கைகுட்டை மாதிரி ஒன்றை கொடுத்து கட்டி கொண்டு வரசொல்லுவார். கதாநாயகி முதலில் மறுத்துவிட்டு பிறகு அணிந்து கொண்டு வருவார். பார்த்தால் அது நீச்சல் உடை. இது கவர்ச்சில்லையா. அப்புறம் நடைப்பற்றி சொன்னிங்க. சிவாஜி படத்தை நன்றாக பாருங்கள். பாவம் சிவாஜி பாதி படத்தில், புல்வெளியில் நடந்து கொண்டே வருவார், இல்லை என்றால் மேட்டிலிருந்து கிழே வந்து கொண்டே இருப்பார்.
அப்புறம் அந்த கால படங்களில் காதல் காட்சிகளில் கண்ணை உறுத்தும் செட்டிங்ஸ் இருக்கும். ஆனால் தற்பொழுது உள்ள படத்தை பாருங்கள். எல்லா பாடல்களும் வெளி நாடுகளில்தான் எடுக்கிறார்கள். பார்ப்பதற்கு எத்தனை அழகாக இருக்கிறது. குறைந்த செலவில் வெளி நாட்டை பார்க்க முடிகிறது.
விஜய் பாடல் காட்சிகளில் துள்ளல் இல்லையா ? குறும்பு இல்லையா? நன்றாக பார்த்து சொல்லுங்கள். நடனத்தையும், ஸ்டைலையும் இந்த காலத்து இளைஞர்கள் ரசிக்கிறார்கள். ஆகவே தலைவர் அவர்களே தமிழ் சினிமாவில் காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் நிகழ்கால நடிகர்கள்தான் என்று கூறி விடை பெற்று கொள்ளுகிறேன். நன்றி வணக்கம்.

திரு. சாலமன் பாப்பையா: பேராசிரியர் இராமச்சந்திரன் சொல்றது சரிய்யாத்தன் இருக்கு. ராஜா சொல்றதும்  சரிய்யாத்தன் இருக்கு. ஆனா தொலைக்காட்சிகளில் இப்பவர காதல் காட்சிகள குடும்பத்தோட          உட்காந்து பார்க்க முடியரதில்ல. உடனே ரிமோட்டை தேட வேண்டி இருக்கு. குழந்தைகளின் கவனைத்தை திருப்ப வேண்டி இருக்கு. சமுதாயத்துக்கு இது கெடுதல். அந்த கால பாடல்களில் கவர்ச்சி குறைவு. அதனால காதல் காட்சி பாடல்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் கடந்தகால நடிகர்கள்தான் என்று  தீர்ப்பு கூறி இத்துடன் என்னுடைய உரையை  முடித்து கொள்ளுகிறேன். நன்றி வணக்கம்

1 comment: