Sunday 14 July 2013

ஞாபகம் வருதே - டூரிங் டாக்கீஸ் அனுபவம்



மாலை ஆறு மணி ஆனால் போதும். நானும் எனது மூன்று நண்பர்களும் டூரிங் டாக்கிஸுக்கு புறப்பட தயராக இருப்போம். ஊரில் எங்களுடய  இரண்டு பொழுதுபோக்குகள். ஓன்று எங்கள் ஊர் புதுக்குளத்தில் (எங்கள் ஊர்  மெரினா பீச் இது) காற்று வாங்குவது, இரண்டாவது டூரிங் டாக்கிஸில் சினிமா பார்ப்பது.   
அனைத்து டூரிங் டாக்கிஸ்களிலும்  ஓலிபெருக்கி மூலம் சீர்காழி பாடிய வினாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடலைத்தான் முதல் பாடலாக போடுவார்கள்.  அந்த கணீர் குரலை கேட்டவுடன் உடனே சைக்கிளின் பெடலை மூன்று பேரும் மிதிக்கத்தொடங்குவோம்.  அடுத்து ஜெமினி சாவித்திரிக்கு அனா, ஆவ்ன்னா, இனா என்று கற்று கொடுத்துக்கொண்டு இருப்பார்.  கற்ற பத்தே நிமிட்த்தில் அன்று ஊமைப்பெண்ணல்லோ என்று சாவித்திரி பாடத் தொடங்குவார். அதை கேட்டவாறு நாங்களும் டூரிங் டாக்கிஸை  அடைந்து விடுவோம். 




ஊரைத்தாண்டிதான் பெரும்பாலும் டூரிங் டாக்கிஸ் இருக்கும். கையில் சில்லறை சேர்ந்தால் போதும் சினிமாதான். பத்து பைசா, ஐந்து பைசா என்று சில்லறைகளைச் சேர்த்து வைத்து இருப்போம். அந்த காலத்தில் சில்லறைகளுக்கு மதிப்பே தனி.
தரை டிக்கெட்டின் விலை ஐம்பது பைசா, பென்ச் டிக்கெட்டின் விலை எழுபத்தைந்து பைசா, சேர் டிக்கெட்டின் விலை ஒரு ரூபாய் என்று இருக்கும். நாங்கள் தரை டிக்கெட்டை வாங்கிக் கொண்டு  உள்ளே  நுழைவோம். டாக்கிஸுக்குள் ஜிலுஜிலென்று குளிர்ச்சியாக காற்று வீசும்.
மாலை 7 மணி ஆனதும் ஸ்லைடு போட ஆரம்பிப்பார்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் படத்திற்கு மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற படத்திற்கு கூட்டம் இருக்காது. டாக்கீஸ் காலியாகஇருக்கும்.
நியுஸ் ரீல் முடிந்தவுடன் படம் ஆரம்பிக்கும். படம் ஆரம்பித்த 30 நிமிட த்திற்குள் படத்தை  நிறுத்தி விடுவார்கள். உடனே டாக்கிஸுக்குள் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பிப்பார்கள். மீண்டும் படத்தை தொடங்குவார்கள். படம் முடிவதற்குள் குறைந்த பட்சம் 5 முறையாவது இடைவேளை விடுவார்கள் படத்தின் பிரிண்ட் மிகவும் மோசமாக இருக்கும்.
இரண்டு மணி கழித்து இடைவேளை விடுவார்கள்.   இடைவேளையில் நாங்கள் முறுக்கு, கடலை மிட்டாய் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பட்த்தை பார்க்கத் தொடங்குவோம். கலர் (கூல்ரிங்ஸ்) விற்பார்கள். நாங்கள் அதைப்பார்த்து பெருமூச்சு விடுவோம். விலை அதிகம் வாங்கி குடிப்பதற்கு எங்களிடம் காசு இருக்காது.
படத்தின் முடிவில் ஒரு வேடிக்கை நடக்கும். பாசமலர் பாவ மன்னிப்பு போன்ற படங்கள் போட்டால் போதும். பெண்களின் பகுதியில் இருந்து அழுகை வரத்தொடங்கும். முகம் சிவக்க சிவக்க அழுவார்கள். சாமி படங்கள் ஆதிபராசக்தி போன்ற படங்கள் போட்டால் போதும் எழுந்து  சாமி ஆடுவார்கள்.. ஹீரோ வில்லனை அடித்து புரட்டிக்  கொண்டு இருப்பார். ஆண்கள் பகுதியில் எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு அடி விடாதே என்று கூச்சலிடுவார்கள். வேடிக்கையாக இருக்கும்
படம் முடிவதற்கு இரவு பத்து மணி ஆகிவிடும். படம் பார்க்க வருவதற்கு முன்னர் இருந்த உற்சாகம் படம் முடியும் போது இருக்காது. இரவு 10 மணி ஆனதால் ஊரே நிசப்தமாக இருக்கும். ஆள் நடமாட்டம் இருக்காது. வீட்டில் வேறு திட்டுவார்கள். பயந்து கொண்டே சைக்கிளை ஒட்டிக்கொண்டு வருவோம்.  
ஆனால் அன்று டூரிங் டாக்கிஸில் படம் பார்த்த மகிழ்ச்சி இன்று மல்டி ப்ள்க்ஸில் படம் பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கவில்லை.  
நன்றி
புதுகை ரவி



3 comments:

  1. மணலை கோபுரமாக்கி... அரட்டை அடித்துக் கொண்டே... ...ம்... அந்த சந்தோசமே தனி...

    பழைய இனிய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. ஆனால் அன்று டூரிங் டாக்கிஸில் படம் பார்த்த மகிழ்ச்சி இன்று மல்டி ப்ள்க்ஸில் படம் பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கவில்லை. //நூறு சதவீகிதம் நிஜம் அண்ணாச்சி.ஞாபகங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்

      Delete